தூத்துக்குடி கடலூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 11 சட்டப் பேரவைச் தொகுதிகளின் கள ஆய்வு அறிக்கையை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது குறித்து 234 தொகுதியிலும் களஆய்வு செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குழுவை நியமித்திருந்தார். அதன்படி, கடலூர் கிழக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கள ஆய்வு செய்ய, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த இசை ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் 11 தொகுதிகளிலும் நேரடியாக திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து திமுக கூட்டணியின் தோல்விக்கான காரணங்கள், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கட்சியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கருத்துகளை கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து களஆய்வின் அறிக்கையை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இசை ஆகியோர் வழங்கினர். அப்போது அவா்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கருத்துகளையும் கேட்டறிந்தாா்.