தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா தெரிவித்துள்ளார்.
டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக 212 கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகள், டிரம்கள், பூந்தொட்டிகள், தேங்காய் ஓடுகள், பயன்படுத்தாத டயர்கள் போன்றவற்றில் கொசு புழுக்கள் உள்ளதா என கண்டறிந்து, மருந்து தெளித்து, கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட திறந்த வெளி இடங்கள், காலி மனைகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், குப்பைகள் மற்றும் கொசு உற்பத்திக்கு காரணமான ஆதாரங்களை அகற்றும் தூய்மை பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கொசுக்களை ஒழிக்க 4 வாகன புகை மருந்து இயந்திரங்கள் மற்றும் 20 கையடக்க புகை மருந்து இயந்திரங்கள் மூலம் அனைத்து வார்டுகளிலும் புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. திறந்த வெளிகளில் குப்பைகளை கொட்டுவோர், தங்கள் வீடுகள் மற்றும் வளாகங்களில் கொசு உற்பத்திக்கு ஏதுவாக தண்ணீரை தேங்க விடுவோர் மற்றும் கொசு உற்பத்தி ஆதாரங்களை வைத்திருப்போர் மீது பொது சுகாதார சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது எனவே பொதுமக்கள் குடிநீர் தொட்டிகளை வாரம் இருமுறை சுத்தம் செய்து மூடி வைக்கவும், வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், காய்ச்சல் இருந்தால் சுய மருத்துவம் செய்யாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகவும், டிபிசி பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.