தூத்துக்குடி பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி கீழ ரத வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பாஜகவிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி புதிய இயக்கத்தில் இணைவது குறித்தும் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது குறித்தும் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் துடிப்புமிக்க இளைஞர்கள் பொதுமக்களை அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கில் இணைப்பது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் உமரி சத்தியசீலன் கூறியதாவது பாரதீய ஜனதா கட்சியிலிருந்து அண்மையில் விலகிய அண்ணாமலை, “WE THE LEADERS” என்ற புதிய அமைப்பைத் தொடங்கி உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். அவருக்கு ஆதரவாக ஒட்டு மொத்த தமிழகம் துணை நிற்கும் தமிழகத்தில் தற்போது உள்ள ஆளுங்கட்சியான தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றான ஒரு மிகச்சிறந்த மக்கள் சக்தியாக அண்ணாமலையின் புதிய இயக்கம் உருவெடுத்துள்ளது. வரும் காலத்தில் இவ்வியக்கம் தமிழகத்தில் முறைப்படி ஆட்சியைப் பிடிக்கும். தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக அண்ணாமலையின் உழைப்பு மிகப்பெரியது, அவரது நோக்கம் நிறைவேறாமல் போனதுடன் அவரது உழைப்பின் பலனை தவெகவினர் அறுவடை செய்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட பாஜகவில் உள்ள நிர்வாகிகளில் சுமார் 60 சதவீதம் பேர் விரைவில் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைய உள்ளனர். இதுபோல மாவட்டத்தில் துடிப்பு மிக்க இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை உறுப்பினர்களாக இணைக்க முதற்கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள 15 மண்டலங்களில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது என்று கூறினாா்.
கூட்டத்தில் மாநகர கிழக்கு மண்டல் தலைவர் ராஜேஷ் கனி, தெற்கு மண்டல் தலைவர் மாதவன்,ஓ ய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலபொய் சொல்லான், விந்தியா முருகன், விளையாட்டுப் பிரிவு கண்ணன், துர்க்கையப்பன், கிழக்கு மண்டல செயலாளர் விஜய், இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் பொன் விக்னேஷ் நிர்வாகிகள் சுடலைமுத்து ராஜகோபால் கந்தசாமி ஹரிஹரசுதன் சிவபெருமாள் சந்தனராஜ் முத்து பெரியநாயகம் கருநாகபாண்டி உட்பட ஏராளமானோர் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் தங்களை பதிவு செய்து இணைத்துக் கொண்டனர்.