தூத்துக்குடி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு தற்போது உயர்த்தியிருப்பது தற்போதைய உலக பொருளாதார சூழ்நிலையில் அது தவிர்க்க முடியாத நடவடிக்கை என பாஜக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
கடந்த 2022ம் ஆண்டிற்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவிலான உயர்வு மேற்கொள்ளப்படாமல் பொதுமக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் மத்திய அரசு கவனமாக செயல்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி, கடந்த முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதற்கு பதிலாக அதன் மீதான கலால் வரியையே மத்திய அரசு குறைத்து பொதுமக்களின் சுமையை தணிக்கும் நடவடிக்கையை எடுத்தது. கடந்த முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல், மத்திய அரசு கலால் வரியை குறைத்ததால் சுமார் ₹2.2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அதாவது 2021 நவம்பரில் பெட்ரோலுக்கு 5, டீசலுக்கு 10 குறைப்பு 2022 மே மாதத்தில் மீண்டும் பெட்ரோலுக்கு 8, டீசலுக்கு 6 குறைப்பு அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் பெரிய அளவிலான விலை உயர்வில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். இந்த இரண்டு கட்ட வரி குறைப்புகளால் மத்திய அரசுக்கு மொத்தமாக சுமார் 2,20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது ஆனால் தற்போது உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம், சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது போன்ற காரணங்களால் இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதி செலவு மிகவும் அதிகரித்துள்ளது. இந்தியா பயன்படுத்தும் பெரும்பாலான கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது. முன்பு குறைந்த விலையில் வாங்கிய எண்ணெயை தற்போது அதிக விலையில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நிதிசுமை ஏற்பட்டுள்ளது. ஒரு கடைக்காரர் பொருட்களை அதிக விலைக்கு வாங்கியும் பழைய விலைக்கே தொடர்ந்து விற்றால் நட்டம் ஏற்படும். அதுபோல எண்ணெய் நிறுவனங்களும் நீண்ட காலம் நட்டத்தில் சென்றால் எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலை வசதிகள், விவசாய நலத்திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அரசுக்கு நிலையான வருவாய் தேவைப்படுகிறது. எனவே நாட்டின் பொருளாதார நிலையை பாதுகாக்கவும், எண்ணெய் நிறுவனங்களின் நிதிநிலையை சீராக வைத்திருக்கவும் தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை அரசியல் நோக்கில் பார்க்காமல், நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட அவசியமான நடவடிக்கையாக பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில கூறியுள்ளாா்.