கால்நடைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய தீவன மேலாண்மைதான் முதன்மை அம்சம். இத்தகைய தீவனத்தை அளிப்பதற்கு சில நடைமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அது என்னென்ன? பார்ப்போம்! மாடுகளின் தீவனத்தில் உப்பினைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். உப்பில் சோடியம் மற்றும் குளோரைடு என்ற இரண்டு தாது உப்புகள் இருக்கின்றன. உடலில் உள்ள செல்களில் இவ்விரு தாது உப்புகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும், இத்தாது உப்புகள் உடலில் சவ்வூடுபரவல் சரியாக நடைபெற உதவுகின்றன. ஒரு வளர்ந்த மாட்டிற்கு நாளொன்றிற்கு 30 கிராம் உப்பினைத் தீவனத்துடன் கொடுக்க வேண்டும். தாதுஉப்புக்கலவையும் கால்நடைகளுக்கு இன்றியமையாதது. கால்நடைகளுக்குத் தேவையான பல்வேறு தாதுஉப்புக்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துள்ள கலவைதான் இந்த தாதுஉப்புக்கலவை. தாதுஉப்புக் கலவையினை அன்றாடம் கால்நடைகளுக்குத் தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும். பால் கொடுக்காத மாடுகளுக்கு நாளொன்றிற்கு 50 கிராமும், கன்றுகளுக்கு நாளொன்றிற்கு 10-15 கிராமும் கொடுக்க வேண்டும்.
எனவே செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு மாலை நேரங்களில் ஊறவைத்த மக்காச்சோளம் அல்லது அடர்தீவனத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும். 25 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு 100 – 150 கிராம் மக்காச்சோளம் அல்லது அடர்தீவனத்தைக் கொடுக்க வேண்டும். 35 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு 200 – 250 கிராம் மக்காச்சோளம் அல்லது அடர்தீவனத்தைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதால் ஆடுகளில் எடை குறைவு ஏற்படுவதைத் தடுக்கலாம். தாய் ஆடுகளின் பால் உற்பத்தி குறையாமல் தடுக்கலாம். இதுதவிர மாலை நேரங்களில் புரதச்சத்து அதிகமுள்ள கடலைக்கொடி உளுத்தம் பொட்டு மற்றும் துவரைத் தொளும்புகளை ஆடுகளுக்கு கொடுக்கலாம். மேய்ச்சலுக்குச் செல்லாத குட்டிகளுக்கு மரஇலைகளைத் (வேப்பிலை, அகத்தி, சவுண்டல் மற்றும் கிளைரிசிடியா) தீவனமாகக் கொடுக்கலாம். கருவேலங்காயினை ஊறவைத்து அல்லது அரைத்துக் கொடுக்கலாம்.