தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சில வழித்தடங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக, ரத்னா காலனியிலிருந்து சண்முகபுரம் இணைக்கும் சாலை சுமார் 30 வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு சுவர் அகற்றப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் சில நபர்கள் சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சண்முகபுரம் பகுதியில் இருந்து வி.இ. ரோட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது இதனையடுத்து சண்முகபுரத்தைச் சேர்ந்த கர்ணன் தலைமையில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து உடனடியாக ரத்னா காலனி பகுதியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது பொதுமக்களிடம் மேயர் ஜெகன் அரசு ஆவணங்களின் அடிப்படையில் சரி பார்க்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் உடனடியாக அதில் சாலைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொதுமக்களிடம் கூறினார். பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பலர் ஆக்கிரமித்திருந்த பல ஏக்கர் இடங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.75 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வரப்பெற்றுள்ளது. ஆங்காங்கே பல வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற வரப்பெற்றுள்ளதையொட்டி ஆவணங்கள் சரிபார்ப்பின் மூலம் சண்முகபுரம் பெருமாள் தெரு, புதுக்கிராமம், மீனாட்சிபுரம் எட்டையாபுரம் ரோடு உள்ளிட்ட பல்வேறு புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடி இல்லாத வகையில் பல மாற்றங்களை செய்து வருகிறோம். மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எந்த ஆக்கிரமிப்பாக இருந்தாலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை!!!