அரசியலமைப்பை செயல்படுத்துவதில் சேவகனாக இருப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா கூறினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடம் மாற்றவும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவாவை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மே மாதம் 26ம் தேதி குடியரசு தலைவர் மற்றும் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர் இருவரின் பணியிட மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, ஒன்றிய சட்ட அமைச்சகம் ஜூலை 14ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது.புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் இன்று காலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழ்நாடு கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஜெ.ரவீந்திரன், ஆர்.நீலகண்டன், பி.குமரேசன், பி.முத்துக்குமார், ஆர்.சுரேஷ்குமார், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.