தூத்துக்குடி, ஜுலை 8.
முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொருளாளர் திரிஸ்டார் எம்.பி.பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் குரும்பூர் சுடலைமணி, மாவட்ட துணைச் செயலாளர் உடன்குடி பொன்ராஜ் ஆகியோர் மனு கொடுக்கும் போராட்டத்தை தொடங்கி வைத்து எழுச்சியுரையாற்றினர்.

இதில் அவர்கள் தெரிவித்ததாவது: தூத்துக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அரசுக்கும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கடந்த 09.10.2023 அன்று இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தோம். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மை நல அலுவலர் 23.11.2023 அன்று தூத்துக்குடி சப்-கலெக்டர் அவர்களுக்கு அனுப்பிய தபாலில் இதன்மீது நடவடிக்கை எடுக்க சொன்னார்கள். ஆனால் சப்-கலெக்டர் அவர்கள் இலவச வீட்டு மனை பட்டா பற்றி இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 26.02.2025 அன்று மீண்டும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனு அளித்தோம். அந்த மனு ஏற்கப்பட்டது என்ற மெசேஜ் வந்தது. முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது தூத்துக்குடி தாசில்தார் நடவடிக்கை எடுக்க அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல் சொன்னார்கள். ஆகவே, தூத்துக்குடி சப்-கலெக்டர் மற்றும் தூத்துக்குடி தாசில்தார் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூத்துக்குடி வட்டார தாலுகா அலுவலக வளாகத்தில் முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நலச் சங்கம் மருத்துவர் சமுதாய பேரவை ஆகியவை சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கடந்த 10 ஆண்டுகளாக தாங்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அரசிற்கு மனு கொடுத்து வருவதாகவும், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் மற்றும் மருத்துவர் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க இந்த அரசு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்விற்கு கோவில்பட்டி சங்கர், குரும்பூர் இசக்கிமுத்து, ஏரல் நாராயணன், கோவில்பட்டி ஐயப்பன், தூத்துக்குடி சரவணன், சின்னதுரை, கோவில்பட்டி தலைவர் குருசாமி, செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் கருமாரி ஈஸ்வரன், முத்தையாபுரம் கிளை தலைவர் வேல்ராஜ், செயலாளர் திருப்பதி, பொருளாளர் கணேசன், ஆத்தூர் மாநகர தலைவர் முருகாண்டி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர், முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நலச்சங்கம் மற்றும் மருத்துவர் சமூக சங்கம் சார்பில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆண்கள் பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் தூத்துக்குடி தாசில்தார் முரளிதரனிடம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தனித்தனியாக தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.